மட்டு.தும்பங்கேணியில் நிலுவையாக உள்ள மின்சார கட்டணத்தை செலுத்துமாறு அமைச்சரிடம் கோரிக்கை!

மட்டக்களப்பு தும்பங்கேணியில் பிரதேச செயலகத்திற்கு உரித்தான, தொழிற்பயிற்சி அதிகார சபையில் நிலுவையாக உள்ள, 896,236.03 ரூபா மின்சார கட்டணத்தை உரிய முறையில் செலுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட, தும்பங்கேணியில் பிரதேச செயலகத்திற்கு உரித்தான தொழிற்பயிற்சி அதிகார சபையில், 2007ஆம் ஆண்டிற்குப் பின்னர், இராணுவம், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் காவலரண்கள் போன்றன மாறி மாறி 2021ம் ஆண்டு வரையும் இருந்துள்ளது.

இதனுடைய மின்சாரப்பட்டியல் செலுத்தாமல் குறித்த காலப்பகுதிக்கு மின்சாரக்கட்டணமாக 896,236.03 ரூபா நிலுவையாக உள்ளது.

இக்கட்டணத்தினை செலுத்துமாறு, நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் நாடபளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கேட்டுக்கொண்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர்,

பொலிஸ் காவலரண் இருந்த காலப்பகுதிக்குரிய கட்டணத்தினை செலுத்துவதாகவும், மீதியினை மின்சார சபையுடன் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை பெறுமாறும், தெரிவித்தார்.