மட்டு.காத்தான்குடியில் ஒருவர் மீது கத்திக்குத்து (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு காத்தான்குடி றிஸ்வி நகரில் கட்சி ஆதரவாளர் ஒருவர் மீது, தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்து நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றதுடன், தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

காத்தான்குடியில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி காரியாலயம் கடந்த 6 ம் திகதி உடைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, புதிய ஜனநாயக முன்னணி கட்சி ஆதரவாளர்களுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது

இதனையடுத்து, கடந்த 14 ம் திகதி இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையையடுத்து, புதிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

சம்பவ தினமான கடந்த சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில், றிஸ்வி நகரில் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் மீது, பொல்லுகள் வாள்கள் மற்றும் கத்தி கூரிய ஆயுதங்களுடன் சென்ற குழுவினர், கத்தியால் குத்தி தாக்குதல் நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்

இதனையடுத்து, தாக்குதலில் படுகாயமடைந்தவர் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தையடுத்து, அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டு, அங்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டனர்

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்