
மட்டு. களுவாஞ்சிக்குடியில் மின்சாரம் தாக்கி தாய் பலி : மகள் ஆபத்தான நிலையில் !
-எமது அலுவலக நிருபர்-
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடிப் பகுதியில் மின்சாரம் தாக்கி இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.40 மணியளவில் உயிரிழந்துள்ளதோடு இவரை காப்பாற்ற சென்ற மகளும் மின்சாரம் தாக்குதலுக்கு இலக்காகி களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையில் அபிவிருத்தி உத்தியோகஸ்தராக கடமையாற்றும் நவநீதன் சசிகலா (வயது-51) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
வீட்டுத்தோட்டத்தில் உள்ள முருங்கை மரத்தில் காய்பறிக்க முற்பட்ட அருகில் இருந்த மின்சார கம்பியில் தொரட்டி கம்பு பட்டதினால் இந்த அனார்த்தம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்கு பின்னரே உறவினர்களிடம் கையளிக்கப்படும் என வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
