
மட்டு. களுதாவளையில் அடி காயங்களுக்குள்ளான நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் சடலமாக நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளார்.
களுதாவளை 4ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியை சேர்ந்த ஆரையம்பதி தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் சசிகுமார் கௌரி (வயது – 44) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் கணவன் மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்த நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையிடையே அடிக்கடி வாய் தகறாறுகள் இடம்பெற்று வருவதாக அயலவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில்மேலும் தெரிய வருகையில்,
குறித்த பெண்ணின் தாய் தனது மகள் வேலைக்குச் சென்றுள்ளார் என நினைத்துக் கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்த மகளின் தொலைபேசிக்கு பலதடவை அழைப்பை மேற்கொண்டுள்ளார். எனினும் அவரது தொலைபேசி செயல்படவில்லை உயிரிழந்த பெண்ணின் சகோதரன் அக்காவின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் அவரது செருப்பு வீட்டின் முன்னால் கிடந்துள்ளன.
இதனால் சந்தேகம் கொண்ட சகோதரன் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்ததற்கு இணங்க வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பொலிஸார் பார்த்தபோது படுக்கையிலே இரத்தம் உறைந்த நிலையில் குறித்த பெண் சடலமாக கிடந்துள்ளார்.
மட்டக்களப்பு குற்றத் தடுப்பு பிரிவினர், கைரேகைகள் தடயவியல் பிரிவினர், உள்ளிட்ட பலரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.றஞ்ஜித்குமார் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மூதூர் பட்டித்திடலை சேர்ந்த உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளார் குறித்த பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
