மட்டு- கல்லாறு பாலத்திலிருந்து குதித்த 35 வயதுடைய குடும்பஸ்தர் காணாமல் போயுள்ளார்
-கல்முனை நிருபர்-
மட்டக்களப்பு பாலத்தில் இருந்து குதித்த 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
ஓந்தாட்சிமடம் – கோட்டைக்கல்லாறு பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவமானது இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த. எஸ். நிரோஜன் (வயது-35) என்பவரே பாலத்தில் இருந்து குதித்துள்ளார் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இங்கு மழையுடன் கூடிய காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் பெரிய கல்லாறு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளது. இதனை பார்வையிட மக்கள் ஆர்வமுடன் சென்று வருகின்றனர்.
இன்று மாலை பாலத்தில் இருந்து திடீரென ஒருவர் குதித்துள்ளார். இதனை கவனித்த மக்கள் குறித்த நபரை காப்பாற்ற முயன்றுள்ளனர். நீரின் ஓட்டம் வேகமாக இருந்ததால் குதித்த நபர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபரை தேடும் பணியில் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளார்கள்.