மட்டு. கல்லடி பாலம் அழிவின் விளிம்பில்
கல்லடிப் பாலம் அல்லது லேடி மனிங் பாலம் என்று அழைக்கப்படும் இந்த பாலம் பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த போது 1924 ஆம் ஆண்டு சேர் வில்லியம் ஹென்றி மனிங் தேசாதிபதி காலத்தில் கட்டப்பட்ட இலங்கையின் மிக நீளமான பாலமாகும். இது மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டத்தை அணுக இப்பாலமே முக்கிய பங்காற்றுகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க பாலமானது இயற்கை சீற்றங்களின் காரணத்தாலும் கால நிலை மாற்றங்களினாலும் தற்காலத்து போக்குவரத்து நெருக்கடியை ஈடு செய்ய முடியாமையினாலும் 2013 ஆம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டது.
எனினும் இந்த பாலத்தினை நடை பயணிகளும் துவிச்சக்கர வண்டிகளும் மற்றும் காலை நேரங்களில் உடல் பயிற்சி செய்வோரும் பயன்படுத்தி வரும் நிலையில் இந்த பாலமானது மிகவும் அபாயகரமாக மாறியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிந்தது.
பாலத்தின் கம்பிகள் துரு பிடித்த நிலையில் இடையிடையே கம்பிகள் உடைந்த நிலையிலும் காணப்படுகின்றது. அத்துடன் இரவில் இந்த பாலத்தினை பயன்படுத்துபவர்கள் வெளிச்சம் இன்மையினால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். மின் விளக்குகளுக்கான இணைப்புக்கள் இணைக்கப்பட்டிருந்தும் அவற்றில் மின் விளக்குகள் பொருத்தப்படாமல் காணப்படுகின்றது.
அத்துடன் குப்பைகளும் பொலித்தீன் பைகளும் பாலத்தின் இடையிடையே கொட்டப்பட்டும் காணப்படுகின்றது.
இந்த நிலை தொடர்ந்து சென்றால் இன்னும் சில வருடங்களில் கல்லடிப்பாலம் ஆற்றினுள் மூழ்கிவிடுவதுடன் சுற்றுளா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வரலாற்று சின்னமாக விளங்கும் இந்த பாலத்தினை எமது அடுத்த தலைமுறையினர் புகைப்படங்களில் மாத்திரம் காணக்கூடியதாக மாறிவிடும்.
எனவே உரிய அதிகாரிகள் இந்த பாலத்தினை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மட்டு நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்