
மட்டு.கல்லடி பாலத்தில் இடம்பெற்ற யுவதியின் தற்கொலைக்கான காரணம் இதுதான்!
மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தின் மேல் இருந்து வாவியில் பாய்ந்து, யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.
தாழங்குடா பகுதியைச் சேர்ந்த இளங்கோ விதுஷாலினி (வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்லடி பழைய பாலத்தில், சம்பவ தினமான நேற்று இரவு 7.15 மணியளவில், குறித்த யுவதி தற்கொலை செய்வதற்கு பாலத்தின் மேல் இருந்து வாவிக்குள் குதித்துள்ளார்.
அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இதனை கண்டதையடுத்து, அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த யுவதியை மீட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
குறித்த யுவதி கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர் எனவும், காதல் விவகாரத்தால் இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த யுவதியின் தற்கொலையையடுத்து, இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று 23 ம் திகதிவரை, மாவட்டத்தில் 3 யுவதிகள், 75 வயதுடைய 3 முதியோர்கள் உட்பட 16 பேர் தற்கொலை செய்துள்ளதாக, பொலிசாரின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
