
மட்டக்களப்பு வாகரை கடற்கரையில் வெடிபொருட்கள் மீட்பு
-வாழைச்சேனை நிருபர்-
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கதிரவெளி கடற்கரையில் வெடிப்பொருட்கள் சிலவற்றை வெள்ளிக்கிழமை மீட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே யுத்த காலத்தின் போது காளிகோயில் வீதி கதிரவெளி கடற்கரையில் விடுதலைப்புலிகளின் கடற்படை முகாம் அமைந்திருந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள், மகசின் கூடுகள் மற்றும் வெடிப்பொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.
கைக்குண்டு-01, பறா-01, மிதி வெடி-01, 50 MM ரக தோட்டாக்கள், தோட்டக்கள் போடும் பட்டி -100, 750 தோட்டக்கள், ரி56 ரக துப்பாக்கி ரவைக் கூடு-14, 0.5 ரக தோட்டக்கள் 76 என்பன மீட்கப்பட்ட பொருட்களாகும்.
குறித்த கடற்கரை பிரதேசத்தில் வெடிப்பொருட்கள் இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து அவற்றினை அகற்றி தருமாறு வாகரை பொலிசார் அவற்றினை மீட்கும் முகமாக வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற அனுமதியினை நாடியிருந்தனர்.
அதன் பொருட்டு நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் பிரகார நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மகதே மகிந்தவிஜயவர்த்தன மற்றும் விசேட அதிரடிப்படையின் குண்டு செயல் இழக்கும் பிரிவினர் சகிதம் அடையாளம் காணப்பட்ட இடத்தில் மேற்படி பொருட்கள் ஜே.சி.பி இயந்திரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டன.
இதன்போது, மீட்கப்பட்ட வெடிப் பொருட்ளில் கைக்குண்டு -01, பறா-01, மிதி வெடி -01 என்பன பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அவை அனைத்தும் சம்வப இடத்தில் பாது காப்பு கருதி நீதிபதியின் அனுமதியுடன் அனுமதியுடன் அவர் முன்னிலையில் செயலிழக்கச் செய்யப்பட்டது.
ஏனைய பொருட்கள் அனைத்தும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
