மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்களுக்கான விசேட கலந்துரையாடல்!

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் மேற்பார்வையின் கீழ் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஷ் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை  இடம் பெற்றது.

இதன்போது மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கிராம, பிரதேச மட்டங்களில் போதைப் பொருள் பாவனையையும், அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளையும் குறைப்பதற்காக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களை வலுப்படுத்தும் முகமாக பயிற்சி பாசறைகள் தலைமை காரியாலயத்தில் நடாத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இதன் போது தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண புனர்வாழ்வு மத்திய நிலைய இணைப்பாளர் கேனல் எம். என்.சி.அஹலபோல, தேசிய அபாயகர கட்டுப்பாட்டு சபையின் உதவி பணிப்பாளர் தர்ஷன, வடக்கு கிழக்கு மாகாண தேசிய அபாயகர கட்டுப்பாட்டு சபையின் இணைப்பாளர் ரசாட், திருகோணமலை மாவட்ட போதைப்பொருள் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.