
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்குப் போசாக்கான உணவு வழங்கல்!
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவு வழங்கல் தொடர்பான மீளாய்வு மற்றும் விரிவுபடுத்தும் செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் சர்வோதயாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
உலக உணவுத் திட்ட நிறுவனம் அரசாங்கத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்குப் போசாக்கான உணவு உட்கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான செயற்றிட்டங்களை மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதன் ஓர் அங்கமாக பாடசாலை மாணவர்களுக்குப் போசாக்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத்திட்டத்தினை வலுப்படுத்துவதற்கு வீட்டுத்தோட்டம் மற்றும் கோழி வளர்ப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இத்திட்டத்தினை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி வலயத்திற்கும் நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரிகளுடன் இருநாள் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண திட்டமிடலுக்கான பிரதி பிரதம செயலாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாகாணப் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உலக உணவுத் திட்ட அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

