
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவை!
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு – மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச காணிகளில் காணப்படும் தீர்க்கப்படாத காணிப் பிணக்குகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் காணி தொடர்பான நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நடமாடும் சேவையானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமையவும், கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனைக்கமைவாகவும் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வீ.வாசுதேவனின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.எம்.ஆர்.சி.தசநாயக்கவின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற நடமாடும் சேவையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 48 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இதன் போது காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகள், அரச குத்தகை காணிகள் போன்ற காணிப் பிணக்குகளுக்கு இதன் போது அதிகாரிகளினால் இயலுமானவரை தீர்வுகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், மாவட்ட காணி அலுவலக உத்தியோகத்தர், காணி உத்தியோகத்தர், மண்முனை வடக்கு நிருவாக உத்தியோகத்தர் (கிராம உத்தியோகத்தர்) மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


