67 வது அரச ஒசுசல கிளை மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
புதிய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்கும் உன்னத நோக்குடன் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாகவும் அரச மருந்தக கிளை இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த அரச மருந்தக கிளை திறப்பு விழா நிகழ்விற்கு பிரதம அதிதியாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர கலந்து கொண்டு இதனை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.
இலங்கை மருந்தக கூட்டு தாபன தலைவர் சீ.விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழா நிகழ்விற்கு, சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், அரசாங்க மருந்தக கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள், பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆர்.முரளீஸ்வரன், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இதுவரை காலமும் மாவட்ட மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியமான மருந்துகளை தூர இடங்களுக்கு சென்று அதிக செலவு செய்து வாங்கி வந்த நிலையில், இனி மக்கள் தங்களுக்கு தேவையான தரமான அத்தியாவசிய மருந்து தேவைகளை குறைந்த விலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.





 
			 
					

