மட்டக்களப்பிலிருந்து தினமும் நவகிரிநகர் வரை போக்குவரத்தில் ஈடுபட்ட வந்த மட்டக்களப்பு சாலைக்கு சொந்தமான பேருந்து, அப்பகுதிக்குரிய சேவையை ஒருவார காலத்திற்கும் மேலாக நிறுத்தியுள்ளதாக தெரிவித்து, அப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இணைந்து இன்றைய தினம் புதன்கிழமை பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பற்று பிரதேச சபைக்கு முன்னால் ஒன்றுகூடிய பொதுமக்கள், கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்திய வண்ணம் வெல்லாவெளியில் அமைந்துள்ள பிரதேச செயலகம் வரை சென்றனர்.
பிரதேச செயலகத்திற்கு முன்னால் வைத்து, போக்குவரத்து சேவையை துரிதப்படுத்திதருமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த இடத்திற்கு வருகை தந்த வெல்லாவெளி பொலிஸார், ஆர்பாட்டகாரர்களுடன் கலந்துரையாடி பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு முயற்சித்த வேளையிலும், தமக்கு உடன் தீர்வு வேண்டும் என தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு இணங்கவில்லை
இந்நிலையில், தமது பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் சீருடையுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையை ஏற்க முடியாது என கூறி சம்பவ இடத்திற்கு வந்த பாடசாலை அதிபர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை உடன் வெளியேறுமாறு தெரிவித்தார்.
எனினும் தமது பிள்ளைகள் கடந்த ஒரு வார காலமாக பாடசாலைக்கு செல்லவில்லை, எமது பிள்ளைகள் ஏன் பாடசாலைக்கு வர முடியவில்லை என கேட்க முடியாத அதிபர், போக்குவரத்துக்காக போராடும் எமது மாணவர்களை தடுக்க முடியாது, என தெரிவித்து, குறித்த பாடசாலை அதிபருக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக அதிபர் அங்கிருந்து வெளியேறினார்.
இது இவ்வாறு இருக்க, போரதீவுபற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பொது முகாமையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பினை மேற்கொண்டு நிலைமையை எடுத்துக்கூறினார்.
அதன்பின் இன்றிலிருந்து மண்டூர் நவகிரிநகருக்கான போக்குவரத்து சேவை இடம்பெறும் என, இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் தெரிவித்ததாக ஆர்ப்பாட்டகாரர்களுக்கு உதவிப்பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இன்றிலிருந்து தொடர்ச்சியாக தமது பிரதேசத்திற்குரிய போக்குவரத்து சேவை ஈடுபடுத்தப்படவில்லையாயின் தமது போராட்டம் தொடரும் என தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

















