மட்டக்களப்பு நகர் பகுதியில் பல ஹோட்டல்களுக்கு சீல் வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புளியந்தீவு, கோட்டைமுனை, கல்லடி, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகளில் இன்று வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு இல்லாமல் மனித பாவனைக்குதவாத உணவுகள் காணப்பட்ட சில ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார அதிகாரிகளினால் இன்று 37 உணவகங்கள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சுகாதார முறையின்றிக் காணப்பட்ட 10 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டதுடன் 11 உணவகங்களுக்கு இதன்போது தற்காலிகமாக  சீல் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்புப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் அவருடைய வழிகாட்டலில் நான்கு பிரிவுகளாக பிரிந்து இச்சோதனை நடவடிக்கையில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்தச் சோதனை நடவடிக்கை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மனித பாவனைக்கு உதவாத கைப்பற்றப்பட்ட உணவுப்பொருட்கள் இன்று அழிக்கப்பட்டதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் இதன்போது தெரிவித்தார்.