மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரி : 45 சாதனை மாணவர்கள்

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையில் இருந்து இந்த வருடம் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 45 மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

சாதனை மாணவர்களைக் கௌரவிக்கும் வரவேற்பு நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

செங்கலடி சந்தி பிரதான வீதியில் இன்று காலை ஆரம்பமான இந்த வரவேற்பில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய 45 மாணவர்களுக்கும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அதிதிகள் சூழ பாடசாலை மாணவர்களின் பாண்ட்வாத்திய இசை முழங்க மாணவர்கள் பேரணியாக பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாடசாலையின் அதிபர் க.சுவர்ணேஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்குடா கல்வி வலையப் பணிப்பாளர் ரீ.அனந்ரூபன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலையப் பிரதிப்பணிப்பாளர்கள் , வலையக்கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சாதனை மாணவர்களை கௌரவித்தனர்.

விஞ்ஞானம், கணிதம், கலை, வர்த்தகம், மற்றும் தொழிநுட்பவியல் ஆகிய அனைத்துத் துறைகளிலிருந்தும் 45 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளமை பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.