
மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ஜந்து பிரிவுகளில் இரவு நேர உணவுப் பாதுகாப்புச் சுகாதாரம் தொடர்பான கண்காணிப்பு
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு சுகாதாரப் பிரிவுக்கு உட்பட்ட ஜந்து பிரிவுகளில் இரவு நேர உணவுப் பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான கண்காணிப்பு நேற்று வியாழக்கிழமை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
கண்காணிப்புக் குழுவின் மூலம் 32 உணவகங்கள் பார்வைக்குட்படுத்தப்பட்டு அவற்றுள் 23 உணவகங்களில் பாவனைக்கு உதவாத உணவுகள் கைப்பற்றிப்பட்டதோடு, 17 உணவகங்களுக்கெதிராக வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அத்தோடு உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு முறைகள் தொடர்பான விழிப்பூட்டல்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சுகாதாரமான,பாதுகாப்பான உணவுகளை மக்களுக்கு எதிர்காலத்தில் கிடைக்க செய்வதே எமது சுகாதாரப் பணிமனையின் நோக்கமாகும் – என பணிப்பாளர் வைத்தியகலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரன் தெரிவித்தார்.
இதில் பிரதிச் சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவான் உட்பட எட்டு வைத்தியர்கள்,2 உணவு மருந்துப் பரிசோதகர்கள்,2 மாவட்ட மேற்பார்வை பொது சுகாதாரப்ப் பரிசோதகர்கள், 4 மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள் ,17 சுகாதாரப் பரிசோதகர்களும் பங்கு பற்றினார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
