மட்டக்களப்பு சவுக்கடியில் அதிகாலை விபத்துக்குள்ளாகிய 2 படகுகள்!

காரைதீவில் இருந்து பயணித்த 2 படகுகள், மட்டக்களப்பு சவுக்கடியில் இன்று சனிக்கிழமை அதிகாலையில் விபத்துக்குள்ளாகியது.

காரைதீவில் இருந்து வாழைச்சேனை துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த இரண்டு படகில், ஒரு படகின் இயந்திரம் ஏற்கனவே பழுதான நிலையில் அந்த படகை கட்டி இழுத்து சென்று கொண்டிருந்த அடுத்த படகும் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு மட்டக்களப்பு – சவுக்கடி கடற்பிரதேசத்தில் தரை தட்டியது

இரண்டு படகிலும் காரைதீவைச் சேர்ந்த ஐந்து பேர் பயணித்துள்ளதுடன் அவர்கள் பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த நிலையில் சவுக்கடி மீனவர்களால் நள்ளிரவு 1.10 மணியளவில் மீட்கப்பட்டு காயமுற்ற படகோட்டி அதிகாலை 1.35 மணியளவில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸாருக்கு ஏறாவூர் மீனவர் அமைப்பின் தலைவர் தெரிவித்ததை அடுத்து உடனடியாக நள்ளிரவே சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விடயத்தை கேட்டறிந்தனர்.

விபத்திற்கான காரணம் இயந்திரக்கோளாறு மற்றும் கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் சூழ்ந்திருந்த காலநிலை மாற்றம் என அறிய முடிகிறது.