மட்டக்களப்பு கிரானில் பிள்ளையானின் மற்றுமொரு சகா கைது!

 

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் மற்றுமொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) கைது செய்துள்ளதாக  பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி இதுவரை பிள்ளையான் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 8ம் திகதி பிள்ளையான் என்றழைக்கப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கடந்த 2006 டிசம்பர் 15 ஆம் திகதி முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அவரது மட்டக்களப்பு காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் அந்த காலப்பகுதியில் கிரான் பகுதியில் இயங்கி வந்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின்   முகாமின்  பொறுப்பாளராக இருந்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பவரை சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்பில் இருந்து வந்த குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை பிள்ளையான் கைது செய்யப்பட்டமை தொடர்ந்து அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமார்  கடந்த ஜூலை 6ம் திகதி  திருக்கோவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து இனிய பாரதியின் அவரது சகாவான சசிதரன் தவசீலன் என்பவை  மட்டக்களப்பு சந்திவெளியில் வைத்து குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.

தொடர்ச்சியாக இனிய பாரதியின் முன்னாள் சாரதியான தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த செந்தூரனை கடந்த ஜூலை 7ம் திகதி தனியார் போக்குவரத்து பஸ் வண்டியை செலுத்திச் சென்ற நிலையில் கல்முனையில் வைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரகாரம் ஜீலை 27 திகதி இனியபாரதியின் மற்றுமொரு சகாவான தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோயில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் கைது செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து பிள்ளையானால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கிதாரியாக செயற்பட்ட பிள்ளையானின் சகாவான காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் ஷகித் என்பவர் கடந்த 13 ம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

மேலும் கொழும்பில் இனியபாரதி நடாத்தி வந்ததாக கூறப்படும் வதைமுகாமுக்கு பொறுப்பாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உட்பட  இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.