
மட்டக்களப்பு கிரானில் இடம்பெற்ற தொழில் வழிகாட்டல் சந்தை
கிரான் நிருபர்
மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தொழில் வழிகாட்டல் சந்தை இன்று வியாழக்கிழமை கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
கிரான் பிரதேச செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் தொழில் வாய்ப்பிற்கு தேவையான உள ஆற்றலை மேம்படுத்துவது எவ்வாறு, நேர்முகப் பரீட்சையை எதிர்கொள்வது எவ்வாறு, தொழில்வாய்ப்பில் இணைவது எவ்வாறு போன்ற விடயங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரினால் விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக இலங்கை தொழில் பயிற்சி அதிகார சவை, தனியார் உற்பத்தி நிறுவனங்கள், தாதியர் சேவை மற்றும் காப்புறுதித்துறை, நிதி நிறுவனங்கள் மேலும் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் வேலையற்ற இளைஞர் யுவதிகள் எப்படி தனியார் துறையில் இணைந்து தங்களது பொருளாதாரத்தினை வளப்படுத்தி கொள்வது தொடர்பாகவும் கலந்துகொண்ட தனியார் துறையினரால் விளங்கப்படுத்த பட்டது.
மேலும் கோறளைப்பற்று தெற்கு மனிதவள வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோத்தர் க.தீசன் தலைமையில் இடம்பெற்ற தொழிற் சந்தைக்கு, பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாவு, மற்றும் மாவட்ட மனிதவலு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் அ.கருணாகரன், தொழில் பயிற்சி அதிகார சபையின் கோரகல்லிமடு நிலையத்தின் பொறுப்பாளர், கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.




