மட்டக்களப்பு – கல்முனை வீதியில் பேருந்துகள் குறைவாகப் பயணிப்பதால் ஆசிரியர்கள் அவதி!

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் இவ்வீதியூடாகப் பயணிக்கும் ஆசிரியர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக தாம் பாடசாலைக்கு 7.30 மணிக்குப் பின்னரே செல்ல முடிவதாகவும், பிங்கர் பிரின்டரில் மூன்று தினங்கள் பிந்திச் சென்றால் அரைநாள் விடுமுறை வழங்கப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது கதிர்காம உற்சவ காலம் என்பதால் அதிகளவு பேருந்துகள் கதிர்காமத்திற்குச் செல்வதாகவும்,  சில பேருந்துகள் அங்கிருந்து நாள்தோறும் வருகை தருவதாகவும் பேருந்துச்சாலை முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, தமது கஷ்டத்தினைப் போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்