மட்டக்களப்பு கரடியனாற்றில் நீரில் மூழ்கி ஒருவர் பலி
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் காரைக்காடு பிரதேசத்தில் பாரிய பள்ளத்தாக்கில் தேங்கியிருந்த நீர் நிலையில் மீன் பிடிப்பதற்காக நேற்று புதன்கிழமை சென்ற நிலையில், ஆழமான குழிக்குள் தவறுதலாக விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.
உறவினர்களும் பொதுமக்களுமாக இணைந்து தேடுதலில் ஈடுபட்டபோது இவர் சடலமாக மீட்டுள்ளனர்.
வேப்பவெட்டுவான் – பாலர்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான வயதுடைய ஜோசப் தவராசா (வயது-50) என்பவரே , சட்டவிரோத மணல் அகழ்வாளர்களினால் தோண்டப்பட்ட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி எம்எஸ்எம். நஸீர் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்.
உடற்கூற்று பரிசோதனை முடிவுற்ற நிலையில் இன்று வியாழக்கிழமை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

