மட்டக்களப்பு – ஏறாவூரில் நீரில் மூழ்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு
மட்டக்களப்பு ஏறாவூர் தாமரக்கேணி பகுதியில் 07 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி இன்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் கலைமகள் வீதி – தாமரைக்கேணி தக்வா பள்ளி கிராமத்தை சேர்ந்த அஷனார் மர்சூம் பாத்திமா றினா (வயது-7) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினமான இன்று மாலை உயிரிழந்த சிறுமி பாத்திமா றினா உற்பட 05 சிறுவர்கள் வீட்டில் இருந்து சுமார் 01 கி.மீ தூரத்தில் உள்ள தாமரைக்கேணி குளப்பகுதிக்கு விளையாட சென்றுள்ளனர்.
“நாம் குளத்தில் நீந்தி விளையாடினோம் றினா எங்களை தாண்டி அதிக தூரம் சென்றாள் – நாம் காப்பாற்ற கையை பிடித்து இழுத்தோம், அவள் நீரினுள் தாண்டுவிட்டாள்” என உடனிருந்த சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
குளத்தில் மூழ்கிய சிறுமியை மீட்டு பிரதேச வாசிகள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் , சம்பவ இடத்திற்கு இன்று இரவு நேரில் சென்று திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம் நசீர் மற்றும் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சிறுவர்கள் அனைவரும் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக, பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.