மட்டக்களப்பு உட்பட 14 மாவட்டங்களில் வெப்பநிலை மட்டம் அதிகரிப்பு

வடமேல், மேல், தெற்கு, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ‘எச்சரிக்கை மட்டத்திற்கு’ அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் திங்கட்கிழமை சில பகுதிகளில் வறண்ட காலநிலையிலிருந்து தற்காலிக நிவாரணம் எதிர்பார்க்கப்படுகிறது, மாலை அல்லது இரவில் களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட காலநிலை நிலவும் என மேலும் தெரிவித்தனர்.