
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் சதுரங்க மற்றும் கரம் உள்ளக அரங்கு திறந்து வைப்பு
மட்டக்களப்பு இந்து கல்லூரியின் சதுரங்க மற்றும் கரம் உள்ளக அரங்கானது, வைத்தியர் காந்தா நடராஜா, வைத்தியர் நிரஞ்சன் ஆகியோரினால் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கல்லூரி அதிபர், க. பகீரதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அவ சொசைட்டி யு.கே (Our Society UK) அமைப்பினது தலைவர் சாம் வேணுகோபால், பழைய மாணவர் சங்க தலைவர் சதிஷ்குமார், பொதுச் செயலாளர் சிவநாதன், பொருளாளர் திவாகர், உப தலைவர் ரஜனிகாந்த், பழைய மாணவர் பொறியியலாளர் யூஜின், மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளரும் கல்லூரியின் பி.எஸ்.ஐ இணைப்பாளருமான லவக்குமார், மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர், பாடசாலை சமூகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அவ சொசைட்டி யு.கே அமைப்பினரின் ஒருங்கிணைப்புடன் கல்லூரியின் பழைய மாணவர்களான வைத்தியர் காந்தா சிதம்பரப்பிள்ளை, வைத்தியர் நடராஜா நிரஞ்சன் ஆகியோரின் நிதிப் பங்களிப்பின் கீழ் துரங்க மற்றும் கரம் உள்ளக அரங்கானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் முன்னேற்றம் கருதி பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை மட்டக்களப்பு இந்து கல்லூரியின் பழைய மாணவர் சங்கமானது செய்து வருகின்ற நிலையில், விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இந்த சதுரங்க, கரம் உள்ளக அரங்கினை அமைத்து விளையாட்டு துறை அபிவிருத்தியில் காத்திரமான சேவையினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
