மட்டக்களப்பில் 74 எலிக்காய்ச்சல் தொற்று நோயாளர்கள் பதிவு: மக்களுக்கு எச்சரிக்கை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் எந்த நேரமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அளவில் அதிகரிக்க கூடிய வாய்ப்புள்ளதாகவும் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 74 பேர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இ. முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எலிக்காய்ச்சல் தொடர்பில் விவசாயிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், பொதுமக்களும் எலிக்காய்ச்சல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். வயல்களிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வசிப்பவர்களை இந்த நோய் பெரிதும் பாதிக்கின்றது. வயல்களில் காணப்படுகின்ற வெள்ளநீர் அல்லது அப்பகுதியில் காணப்படுகின்ற கிணறுகளில் கலக்கின்ற நீர் நிலைகளில் இருந்து எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.

கூடியளவு இவ்வாறான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் கொதித்தாறிய நீரைக் குடிக்க வேண்டும், அப்பகுதிகளில் வயல்களில் இறங்கி வேலை செய்பவர்கள் போதிய பாதுகாப்பு அங்கிகளுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த எலிகாச்சல் நோய் சம்பந்தமான மேலதிக தகவல் தேவைப்படுபவர்கள் அண்மையில் உள்ள எமது சுகாதார அலுவலகத்தை நாட முடியும் எனவும் வைத்தியரின் ஆலோசனையுடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் 74 எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் இதில் கடந்த மாதம் நான்கு பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதேவேளை சமீப நாட்களில் யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்