மட்டக்களப்பில் 16 வயது மகளை இரும்பு கம்பியால் தாக்கிய தாய்க்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

மட்டக்களப்பில் 16 வயதான மகளின் கையில் இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த 45 வயது தாயாருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த பெண் மீது சுமத்தப்பட்டுள்ள 3 குற்றங்களுக்கும் 10 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 5 ஆயிரம் தண்டபணம் மற்றும் 30 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 15 ஆயிரம் ரூபா தண்டமாக செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த 25ம் திகதி கட்டளையிட்டு தீர்ப்பளித்தார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் கடந்த 2009 நவம்பர் 21 ம் திகதி 16 வயதுடைய தனது மகளின் கையில் இரும்பு கம்பியால் தாக்கி காயப்படுத்தி சித்திரவரை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.

இவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு இடம்பெற்று வந்த பின்னர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு 2017 ஜூலை 12ம் திகதி வழக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குறித்த தாயார் குற்றவாளியாக இனம்காணப்பட்டார்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணைக்காக கடந்த 25 ம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இடம்பெற்றபோது குற்றவாளிக்கு நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.