மட்டக்களப்பில் வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக வாக்குப் பெட்டிகள் மற்றும் அதிகாரிகளை வாக்களிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கும் முதற்கட்ட செயற்பாடுகள் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் ஆரம்பமாகியுள்ளன.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவத்திலும் நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து நடவக்கைகளும் இடம்பெற்று வருவதுடன் வாக்கு பெட்டிகள் இன்று காலை கொண்டு வரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு இந்து கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல் அலுவலகத்தில் இருந்து இன்று காலை முதல் வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜே.ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இந்த வாக்குப் பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்து கல்லூரியிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டுகின்றன.
இன்றைய தினம் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 260 வாகனங்கள் போக்குவரத்து சேவைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 442 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்தார.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புக்காக 1500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உள்ள 13,421 வாக்களிப்பு மையங்களுக்கு வாக்குப் பெட்டி மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் இந்த தேர்தலுக்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 41,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
நாடளாவிய ரீதியாக 13,421 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
மேலும், வாக்கெண்ணும் பணிகளுக்காக 1,713 நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் நாளை காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வாக்களிப்பு நடைபெறும் எனவும் பொதுமக்கள் தமது வாக்குகளை உரிய நேரகாலத்துக்கு சென்று செலுத்துமாறும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்





