மட்டக்களப்பில் மதுபோதையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் அட்டகாசம்

மட்டக்களப்பு நகரில் மதுபோதையில் மனைவி, மகனை தாக்கியதாக மனைவி வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய உத்தியோகத்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச செயலகம் ஒன்றில் கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று மதுபோதையில் மனைவி மகன் மீது தாக்கியதை அடுத்து அங்கிருந்து தப்பிய அவர்கள், பொலிஸ் நிலையம் போவதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்துக்கு சென்றனர்.

இந்நிலையில் அவர்களை பின் தொடர்ந்து பொலிஸ் நிலையத்துக்குள் சென்று அங்கு பெரும் அட்டாகாசம் செய்த உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்தனர். கைதானவரை வைத்தியசாலையில் அனுமதித்து மதுபோதை பயன்படுத்தியுள்ளார் என உறுதிபடுத்தப்பட்டது.

பின்னர் அவருக்கு எதிராக குற்றவியல் சட்டகோவை 1979 ஆம் ஆண்டு 4 ஆம் பிரிவின் கீழ் மதுபோதையில் பொலிஸ் நிலையத்தில் கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.இதன்போது சந்தேக நபருக்கு 2,500 ரூபா அபதாரம் செலுத்துமாறும் 25,000 ரூபா கொண்ட ஒரு வருட நன்னடத்தை பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டார்.