மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் 17 வயது சிறுவன் கைது!
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகரில், வீடு ஒன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர், பெருமளவிலான ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் 17 வயது சிறுவன் ஒருவரை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவன் கொக்குவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, குறித்த முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையில், சம்பவதினமான இன்று பகல் கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகரில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு, சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, குறித்த வீட்டில் இருந்த சிறுவன், விசேட அதிரடிப்படையினரை கண்டு, தனது உடமையில் மறைத்து வைத்திருந்த போதை பொருட்களை வீசியுள்ளான்.
அதனைத்தொடர்ந்து,, சிறுவனிடமிருந்து, 10 கிராம் 950 மில்லிக்கிராம் ஹரோயின் போதை பொருளும், பொதி செய்யப்பட்ட 650 மில்லிக்கிராம் கொண்ட 5 பக்கற் கேரளா கஞ்சாவும், 7 கிராம் 200 மில்லிக்கிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டது.
17 வயது சிறுவனை கைது செய்துள்ள நிலையில், சான்று பொருட்களுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
