மட்டக்களப்பில் பூட்டிய வீட்டிலிருந்து சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி-நொச்சிமுனை கலைமகள் வீதியில் பூட்டப்பட்ட  வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

ஜெயசிங்கம் ஜெயனிகாந்  (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட பொது சுகாதார பரிசோதகரான குறித்த நபர் மனைவியை பிரிந்து குறித்த வீட்டில் தனியாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது விடுமுறை காரணமாக வீட்டில் தனித்திருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த 5 நாட்களாக அவரிடமிருந்து எவ்வித தொலைபேசி அழைப்புகளும் வராத காரணத்தினால் உறவினர்கள் இன்று வியாழக்கிழமை காலை அவரை தேடி அவரது வீட்டிற்கு சென்ற வேளையில் அவர் வீட்டில் உயிரிழந்த நிலைiயில் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.

குறித்த நபர் இரண்டு நாட்களுக்கு முன் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்