மட்டக்களப்பில் பண மோசடியில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பில் இருவரிடம் பணமோசடியில் ஈடுபட்ட குற்றப்புலனாய்வு துறை உத்தியோகஸ்தர் என தன்னை அடையாளப்படுத்தியவருக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் வெளிநாட்டு முகவர் ஒருவரிடம் வெளிநாடு செல்வதற்காக பணத்தை கொடுத்து ஏமாந்த நிலையில் வெளிநாட்டு முகவருக்க எதிராக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
இதனை அறிந்து கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ புலனாய்வு பிரில் செயற்பட்டு வந்தவர் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்கி தான் விசேட குற்ற விசாரணைப் பிரிவு உத்தியோகஸ்தர், எனவே குறித்த வெளிநாட்டு முகவரிடம் உடன் பணத்தை பெற்று வருவதாகவும் உடன் இந்த பணத்தை வாங்கி தர முடியும் அதற்கு பணம் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குறித்த சந்தேக நபரிடம் பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவையும் மற்றயவர் ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாட்டு முகவரிடம் பணத்தை பெற்று கொடுக்காமல் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளதையடுத்து அவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த இருவரும் பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்தனர்.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர், அவரது வீட்டில் வைத்து நேற்று முன் தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து செவ்வாய்க்கிழமை அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.