மட்டக்களப்பில் “நான் அவன் இல்லை” சிறுவன் தெரிவிப்பு : ஒருவாரத்தில் 2 சிறுமிகள் கர்ப்பம்

-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு பொலிஸ் பிரிவுகளில் ஒருவாரத்தில் 3 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்;டுள்ளதுடன் , இரு சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மட்டக்களப்பு பகுதியில் உள்ள ஒரு பொலிஸ் பிரிவில் சில தினங்களுக்கு முன்னர் வாந்தியெடுத்த 17 வயது சிறுமி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்தபோது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டபோது குறித்த சிறுமியின் பெற்றோர் மீன்பிடி தொழிலுக்காக மீன் வாடியில் இருப்பதாகவும், வீட்டில் குறித்த சிறுமி அவரது சகோதரருடன் தங்கியிருந்துள்ளார் . கடந்த 3 மாத்திற்கு முன்னர் சம்பவதினம் குறித்த சிறுமி வீட்டிற்கு இரவு வீதியால் நடந்து வரும்போது இருட்டில் வந்த ஒருவர் தன்னை இழுத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்ததாகவும் அவரை அடையாளம் தெரியாது என பொலிசாரின் விசாரணையின் போது தெரியவந்துள்ளதையடுத்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை குறித்த பொலிஸ் பிரிவில் 13 வயது சிறுமி ஒருவரை 3 மாத கர்ப்பிணியாக்கிய 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்ததனர். இதன் போது கைது செய்யப்பட்ட சிறுவன் நான் இதற்கு காரணம் இல்லை எனது நண்பன் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ள நிலையில் குறித்த சிறுமி இவர்தான் காரணம் என முறைப்பாட்டில் தெரிவித்ததையடுத்து கைது செய்யப்பட்ட சிறுவனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பிரிவின் கீழ் உள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

இவ்வாறு ஒரு வாரத்தில் 3 சிறுமிகள் மாவட்டத்தில் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.