மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திரை நீக்க

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்று கிழமை காலை கல்லடிப்பாலத்திற்கு அருகில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பீடம் அடங்கலாக 25.05 அடி நீளமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திரை நீக்கமும் அதனைத் தொடர்ந்து பொது விழாவும் இடம் பெற்றது.

ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்குமுகமாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில் முப்பெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாக்களில் ஒன்றான  சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திரை நீக்கம் இன்று இடம்பெற்றதுடன் ராமகிருஷ்ண மிஷன் மணி மண்டபத்தில் பொது விழாவும் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் இந்தியா வேலூர் மாவட்ட உலகளாவிய ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடங்களின் துணைச் செயலாளர் ஸ்ரீமத் சுவாமி போதசாரானந்தஜி மகராஜ் கலந்து சிறப்பித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் மாநகர சபை முதல்வர் சரவணபவன், கிழக்கு மாகாணக் கல்வி பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.