மட்டக்களப்பில் சுவாமி ஜீவனானந்தஜீயின் திருவுருவச்சிலை திறந்து வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்-

ஆன்மீகத் துறவி சுவாமி ஜீவனானந்தஜீ மஹராஜின் திருவுருவச் சிலை மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியிலுள்ள நாவற்குடா இந்துக் கலாசார மண்டபத்துக்கு முன்பாக இன்று சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு வைபவ ரீதியாகத் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

சுவாமி ஜீவனானந்தஜீ நூற்றாண்டு விழாச் சபை உப தலைவர் எஸ்.ஜெயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொழும்பு ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் மூத்த துறவி சுவாமி இராஜேஸ்வரானந்தஜீ மஹராஜ் சமய வழிபாடுகளுக்கு மத்தியில் சுவாமிஜீயின் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சுவாமி ஜீவனானந்தஜீ மஹராஜ் நினைவுகள் மீட்டல் பெருவிழா மட்டக்களப்பு நாவற்குடா இந்துக் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஆசியுரையினை இராமகிருஷ்ணமிஷன் இலங்கைக் கிளை உப தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் ஆசியுரை வழங்க,சுவாமி ஜீவனானந்தஜீ மஹராஜுடனான நினைவுப் பகிர்வுகளை சுவாமிகளின் அணுக்கத் தொண்டர் க.பத்மநாதன்,மட்டக்களப்பு காயத்திரி பீடத்தைச் சேர்ந்த சிவயோகச் செல்வன் த.சாம்பசிவம்,கொழும்பு இராமகிருஷ்ணமிஷன் மூத்த ஆன்மீகத் துறவி சுவாமி இராஜேஸ்வரானந்தஜீ,சுவாமி ஜீவனானந்த நூற்றாண்டு விழாச்சபை ஆலோசனைக்குழு உறுப்பினர் க.குருநாதன்,மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிஷன் பொதுமுகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தாஜீ மஹராஜ் ஆகியோர் எடுத்துக் கூறினார்.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமான சுவாமிகளின் திருவுருவச் சிலையினை நிர்மாணிக்க முழுமையான நிதிப் பங்களிப்பினை வழங்கிய கந்தையா கிருபைநாதன் ஏற்பாட்டுக் குழுவினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்சிலை திறப்பு விழா நிகழ்வில்,இந்தியா தஞ்சாவூர் இராமகிருஷ்ணமடத் தலைவர் விமூர்த்தானந்தஜீ மகராஜ்,ஸ்ரீமத் சுவாமி சுரார்சிதானந்தாஜீ மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் முதல்வர் தியாகராஜா சரவணபவன் உட்பட இராமகிருஷ்ணமிஷன் இல்லத் தொண்டர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்