மட்டக்களப்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 31வது ஞாபகார்த்த நிகழ்வு
மட்டக்களப்பில் 2004ஆம் மே 31ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 31வது ஞாபகார்த்த நிகழ்வும் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டமும் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு நகரில் அமையப்பெற்றுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபிக்கருகில் நடைபெற்றது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு. ஊடக அமையம், வடக்கு கிழக்கு தெற்கு ஊடக அமைப்புகள் இணைந்து நடத்திய இந் நிகழ்வில், நடேசனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து, சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரும் போராட்டம் நடைபெற்றது.
இதன்போது, கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம், இலங்கை தொழில்சார் ஊடகவியலாளர் அமைப்பு, இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் உறுப்பினர்கள். அரசியல்வாதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பைத் தளமாகக் கொண்டு வீரகேசரி, சக்தி எப்எம், ஐ.பி.சி.தமிழ், உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களுக்கு செய்தியாளராக பணியாற்றியிருந்தார்.
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி காலை தனது அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த காலை வேளை மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.