மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்திற்கு அருகில் நடமாடிய சந்தேக நபர்கள் இருவர் கைது

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்துக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த இரு நபர்களை இன்று புதன்கிழமை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குருநாகலைச் சேர்ந்த ஒருவருக்கு கண்ணில் ஏற்பட்டுள்ள வெண்படல நோயை குணப்படுத்துவதற்காக மட்டக்களப்பு மென்ராசா வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சீயோன் தேவாலயத்தின் போதகருடன் தொடர்பு கொண்டதாகவும், இதனையடுத்து நோய் ஏற்பட்டவரும் அவருக்கு உதவியாக இருவருமாக குருநாகலில் இருந்து பிரயாணித்து சம்பவதினமான இன்று காலை மட்டக்களப்பை வந்தடைந்து குறித்த சீயோன் தேவாலயத்துக்கு செல்வதற்காக இடம் தெரியாது அந்த பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிவருவதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸ் அவசர சேவை இலக்கத்திற்கு தெரிவித்ததையடுத்து உடனடியாக பொலிஸார் அந்த இடத்துக்கு சென்று 35, 25 வயதுடைய இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரதும் கைவிரல் அடையாளம் பெற்று விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.