மட்டக்களப்பில் சிறுவர் தினத்தை முன்னிட்டு விவாத போட்டிகளுக்கான பயிற்சிகள்

-மட்டக்களப்பு நிருபர்-

அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவனின் மேற்பார்வையில் மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் மதிராஜ் எற்பாட்டில் சிறுவர் தினத்தை முன்னிட்டு விவாத போட்டிகளுக்கான பயிற்சிகள் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம் பெற்றது.

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் 2024 ஆம் ஆண்டு சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு “பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம் ” எனும் கருப்பொருளை வலுப்படுத்தும் முகமாக இப் பயிற்சிப் பாசறை நடைபெற்றது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் காணப்படும் சிறுவர் கழகங்களை வலுப்படுத்துவதற்கும் சிறார்களை ஆளுமையுடன் கூடிய பேச்சாற்றல் மிக்கவர்களாக மாற்றுவதற்கு மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட பயிற்சிப் பாசறைக்கான அனுசரணை சேரி நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது விவாத நுட்பங்கள் மற்றும் விவாதத் திறன்களை மேம்படுத்துவதற்கு இத் துறையில் நிபுனத்துவம் பெற்றவர்கள் மூலம் ஆலோசனை மற்றும் நுணுக்கங்கள் சிறார்களுக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வின் வளவாளராக சிவ வரதகரன், அன்பழகன் குறூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது சிறுவர்களுக்கான உரிமை, சிறுவர் பாதுகாப்பு, சமகால சவால்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் சேரி நிறுவன தேசிய திட்ட முகாமையாளர் வி.இ. தர்ஷன், பதவி நிலை உதவியாளர் எம். ரிழா, சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்