மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு!

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்திவெளி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சித்தாண்டி சந்தனமடு பகுதிக்கு அண்மித்த இடங்களில் இடம்பெற்ற சுற்றி வளைப்பு தேடுதலில் சந்தேகத்திற்கு இடமான 4 பேர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2 வரல்களில் 80 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 2 தகர வரல்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டது.

சித்தாண்டி சமூகமட்ட இளைஞர்கள் மற்றும் சந்திவெளி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சுற்றிவளைப்பில் 2 மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய சந்தேக நபர்கள் 4பேரும் மாவடிவேம்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

குறித்த நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக் காலமாக மாவடிவேம்பு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத கசிப்பு விற்பனை மற்றும் உற்பத்தி இடங்களை தேடி சந்திவெளி மற்றும் ஏறாவூர் பொலிசார் இணைந்து சுற்றிவளைப்பு செய்து கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றது.

சுற்றி வளைப்பில் கைப்பற்றபட்ட கசிப்பு மற்றும் பொருட்களை நீதிமன்றுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.