மட்டக்களப்பில் குளத்தின் அணைக்கட்டை சேதப்படுத்தியுள்ளதாக மக்கள் ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு)

மட்டக்களப்பு வேப்பவெட்டுவான் பகுதியில் தனி நபர் ஒருவர் குளத்தின் நீரேந்து பகுதியில் தனக்கு சொந்தமான காணி இருப்பதாக தெரிவித்து குளத்தின் அணைக்கட்டை சேதப்படுத்தி நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாலர்சேனை கிராமத்தில் காணப்படும் சங்குல குளமே இவ்வாறு உடைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுள்ளமையை கண்டித்து குறித்த பகுதி மக்கள் ஆர்ப்பட்டமொன்றை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்துள்ளனர்.

பாலர் சேனை கிராமத்தில் 412 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்கள் குடிநீருக்காகவும், விவசாயம், மீன்பிடி மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தங்கள் ஜீபனோபாய தொழில்களுக்காகவும் சங்குல குளத்தை நம்பி வாழ்கின்றனர்.

இந்நிலையில் ஏறாவூரை சேர்ந்த தனி ஒருவர் குளத்தின் நீரேந்து பகுதியில் தனக்கு சொந்தமான காணி இருப்பதாக கூறி விடயத்தை திரிவுபடுத்தி, குறித்த நபர் தடுப்பணைகளை அடாவடித்தனமாக உடைத்து சேதப்படுத்தி நீரை வெளியேற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

குளத்தின் நீர் தற்போது வீண் விரயமாக வெளியேறி வருகிறது. குளத்திலுள்ள நீர் இவ்வாறு வெளியேற்றப்படுமாக இருந்தால் தாம் நீர்தாட்பாடு காரணமாக இக் கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டிய அபாயம் ஏற்படும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.