மட்டக்களப்பில் குடும்பத்தகராறில் ஒருவர் பலி

-வாழைச்சேனை நிருபர்-

கல்குடா பொலிஸ் பிரிவில், குடும்பத் தகராறு காரணமாக இடம்பெற்ற கைகலப்பில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாடசாலை வீதி பட்டியடிச்சேனையைச் சேர்ந்த  காந்திமதி வயது (67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை காலை தீபாவளி தினமன்று உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்ற இளைய சகோதரி மற்றும் அவரது மகன் ஆகியோர் உயிரிழந்தவரின் மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அது கைகலப்பாக மாறியதினால் இருசாராரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.