
மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் கறுப்பு பட்டி போராட்டம்
யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்பு வட கிழக்கை பௌத்த மயமாக்குவற்காக மௌன யுத்தம் தற்போது இடம்பெற்று கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஊடக அடக்குமுறைக்கு எதிரான இடம்பெற்ற மாபெரும் கறுப்பு பட்டி போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
கறுப்பு ஜனவரியை முன்னிட்டு இன்று ஊடக அடக்கு முறைக்கு எதிராகவும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் மாபெரும் கறுப்புப் பட்டி போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது கோவிந்தன் கருணாகரம் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை வாழ் மக்களின் நலனுக்காக கொண்டு வரப்படுகின்ற சட்டங்களை விட மக்களை அடக்குவதற்காகவே அதிகளவான சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றது.
1979 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக தற்காலிகமாக 6 மாதங்களுக்கு மாத்திரம் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டாலும் இன்று வரை அந்த சட்டம் காணப்படுகின்றது. ஆரம்பத்திலே தமிழர்கள் மாத்திரம் இதனால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்போது இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவரும் இந்த சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஊடகங்க சுதந்திரம் மற்றும் மக்களின் கருத்து சுதந்திரத்தை அடக்குவதற்காக தற்போது பாராளுமன்றத்தில் நிகழ்நிலை காப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இதற்கு வடகிழக்கில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் சர்வதேசத்தின் கவனம் இலங்கை பக்கமாக திரும்பியுள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க சர்வதேசங்கள் அழுத்தம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது அதற்கு பதிலாக கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் மூன்றுமே எங்களுக்கு வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.
குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மத குருமார்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


