மட்டக்களப்பிலிருந்து யாழ் மரண சடங்கிற்கு சென்ற பெண் விபத்தில் பலி

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு மரணச் சடங்கிற்காக சென்றுவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் விபத்தில் சிக்கி இன்றையதினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதன்போது மட்டக்களப்பு – மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது – 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மட்டக்களப்பைச் சேர்ந்த குறித்த பெண்ணும் அவரது உறவினர்களும் சிலர், யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உறவினரின் மரணச்சடங்கில் கலந்து கொண்ட பின்னர் கடந்த 10ஆம் திகதி வேனில் வீடு நோக்கி புறப்பட்டிருந்தனர்.

இதன்போது கொக்காவில் பகுதியில் பன்றி ஒன்று வீதிக்கு குறுக்கே ஓடிய நிலையில் பன்றியின் மீது மோதாமல் இருப்பதற்காக வாகனத்தை வலது பக்கம் நோக்கி திருப்பியவேளை வாகனம் தலைகீழாக புரண்டுள்ளது. இந்நிலையில் குறித்த விபத்தில் படுகாயம் அடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மூவரும் கடந்த 11ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற் கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.