
மசாஸ் நிலைய பணிப் பெண்களிடமிருந்து இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்ஒருவர் கைது.
மசாஸ் நிலைய பணிப் பெண்களிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
எலயாபத்துவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 27 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த 14ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் பெண்ணொருவருடன் இணைந்து மோட்டார் சைக்கிளில் மசாஸ் நிலையம் ஒன்றிற்குச் சென்றுள்ளார். இதன்போது, சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் மசாஸ் நிலையத்திலிருந்த பணிப்பெண்களிடம் தான் சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காக வந்ததாகவும் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு 3 ஆயிரம் ரூபா பணம் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து குறித்த பணிப்பெண்கள் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 2 ஆயிரம் ரூபா பணத்தை கொடுத்துள்ளனர்.
மறுநாள் இரவு மற்றுமொரு நபருடன் இணைந்து குறித்த மசாஸ் நிலையத்திற்கு மீண்டும் வந்துள்ளார். இதன்போது, சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னுடன் வந்த நபருக்கு இலவசமாகச் சேவையை வழங்க வேண்டும் என மசாஸ் நிலைய பணிப்பெண்களிடம் கூறியுள்ளார்.
பின்னர், சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் மசாஸ் நிலைய பணிப்பெண்ணின் கணவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
