மக்கள் எதிர்பார்த்த வளமான நாட்டைக் கட்டியெழுப்புவோம்

 

அனைத்து இலங்கையர்களும் எதிர்பார்த்த வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை அதேபோன்று நிறைவேற்றுவதாகவும் அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மாலைதீவு தேசிய பல்கலைக்கழக (MNU) கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற மாலைதீவில் உள்ள இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பில் கலந்து கொண்டபோது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

மாலைதீவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில், நாட்டில் வசிக்கும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் இலங்கை தொழில்வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெறப்பட்ட ஆணையின் முக்கிய எதிர்பார்ப்பான புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஊழல் நிறைந்த அரசியல் கட்டமைப்புக்கு பதிலாக, நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே இடத்தில் தேக்கமடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டில் அனைவருக்கும் சமமாகச் செயற்படுத்தப்படும் சட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இன்றைய தலைமுறை அனுபவிக்கும் சிரமங்களை அடுத்த சந்ததிக்கும் உரித்தாக்காமல் அவர்களுக்கு சிறந்த நாட்டைக் கட்டியெழுப்பி, நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகள் கொண்ட எதிர்கால சந்ததியை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஜனாதிபதி, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெற்றிக்காக தங்களை அர்ப்பணித்த மாலைதீவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.