
மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ளாத ஜனாதிபதி எவ்வாறு ஒரு சர்வதேச உடன்படிக்கையை செய்ய முடியும்?
-யாழ் நிருபர்-
ரணில் விக்கிரமசிங்க தேசிய பட்டியலில் ஒரு பாராளுமன்ற ஆசனத்தை பெற்றவர். அவர் ஒரு மக்கள் ஆணையை பெறாத ஜனாதிபதி. மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ளாத ஜனாதிபதி எவ்வாறு ஒரு சர்வதேச உடன்படிக்கையைச் செய்ய முடியும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரதப் பிரதமர் மோடியை சந்தித்து இலங்கை – இந்தியா தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து தீர்மானங்கள் எடுக்கவுள்ள நிலையில், ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் நாங்கள் பல ஒப்பந்தங்களை பார்த்திருக்கின்றோம். அவர்கள் மக்கள் ஆணையை பெற்றிருந்தும் கூட அந்த ஒப்பந்தங்களை தூக்கி எறிந்த நிலையில் தற்போது இவ்வாறான ஒரு ஒப்பந்தத்தை செய்யவிருப்பதை மிகவும் விஷனத்துக்குரிய ஒரு விடயமாகத்தான் பார்க்க முடியும்.
ஆட்சியாளர்கள் ஊழல் மோசடிகளுக்கு எதிராக தான் செல்ல வேண்டும் என மக்கள் தெரிவித்து இருக்கின்றார்கள். ஆனால் இன்றைக்கு அந்த விடயம் நடைபெறாமல் அதே ஆட்சியாளர்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் மக்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு ஊழலற்ற ஆட்சி ஒன்று வேண்டும். அதை நோக்கி நகர்வதற்கு அரசு முற்பட வேண்டும். அதே பாராளுமன்ற உறுப்பினர்கள், அதே அமைச்சர்கள் இருக்கின்ற வேளையிலே எவ்வாறு ஒரு ஊழலற்ற ஆட்சியை நடத்த முடியும்?
இன்றைக்கு இலங்கையில் மயக்க மருந்து பிரச்சினையால் பலர் உயிரிழந்துள்ளார்கள். வேறு இடங்களில் கண் பார்வையை இழக்க கூடிய அளவு மருந்து பாவிக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வாறான பல செய்திகள் ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன. எனவே இவ்வாறான சம்பவங்களுக்கு காரணமாக இருக்கின்ற அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பது மக்களது கோரிக்கை.
இன்று மக்கள் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் இவ்வாறான மரணங்கள், இழப்புக்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கின்றது. எனவே அதற்கான பொறுப்பு கூறவேண்டிய அமைச்சர்கள் உடனடியாக தங்களது பதவியை விட்டு விலகி புதிய ஒரு தேர்தலை நோக்கி நகர்வது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது, என அவர் மேலும் தெரிவித்தார்.
