மக்கள் ஆணையில்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் இணையமாட்டோம் – சஜித்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியோ அதன் தலைமையிலான கூட்டணியோ மக்கள் ஆணையில்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் இணைய மாட்டாது. இடைக்கால அரசை அமைத்து இன்னொரு நாடகத்திற்கு துணை போவதை விடவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது நல்லதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டியில் வைத்து தெரிவித்தார்.

இது கட்சியின் கொள்கை என்றும், அந்தக் கொள்கையை கடைபிடிப்பதா இல்லையா என்பதை ஒவ்வொரு தனிநபர்களும் முடிவு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்த பிரேரணையின் பிரதியை அஸ்கிரிய பீடாதிபதி வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரிடம் கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

69இலட்சம் மக்களின் ஒப்புதலுடன் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2020பொதுத் தேர்தலில் அறுபத்தெட்டு இலட்சம் பேர் இணைந்து 140எம்.பிக்களை இந்த அரசாங்கத்திற்கு வழங்கியது. பிறகு வழக்கம் போல சலுகைகள், பலன்கள் என்று ஒரு அணியை உருவாக்கி அவர்களின் உதவியால் வழக்கமான மூன்றில் இரண்டு வாக்குகளில் அதிகாரங்களை பெற்றனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை, பதவி நீக்கம் என்பது ஒரு விடயம் அரசுகளை உருவாக்குவது என்பது வேறு. ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரி காலி முகத்திடல் உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் இளைஞர் குழுக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளனர். திருடர்களைப் பிடிக்கச் சொல்கிறார்கள்.திருடிய பணத்தைத் திரும்பப் பெறச் சொல்கிறார்கள்.

இவர்களுடன் சென்று ஆட்சியமைத்து அந்த விடயங்களைச் செய்ய முடியுமா? காலிமுகத்திடல் போராட்டத்தை மக்கள் எந்த வகையிலும் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். முன்னோக்கி செல்வதில் உறுதியாக உள்ளோம்.