மக்களுக்கு சுகாதாரமான மீன்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு உத்தரவு

-கிண்ணியா நிருபர்-

கிண்ணியா பிரதேசத்தில் விற்பனை செய்யப் படுகின்ற பாவனைக்கு உதவாத மீன்கள் தொடர்பில் கிண்ணியா நகர சபைக்கு தொடராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடி உரிய தீர்வுகளை பெறுவதற்காக கிண்ணியா நகர சபை தவிசாளர் எம் .எம் .மஹ்தி தலைமையில் நேற்று திங்கட்கிழமை நகர சபை கேட்போர் கூடத்தில் கலதுரையாடல் நடைபெற்றது.

குறிப்பாக வெளிப் பிரதேசங்களில் இருந்து வாகனங்களில் கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்ற மீன்களில் பழுதடைந்த மற்றும் உடல் நலத்திற்கு கேடான போமலின் மற்றும் டயனமைட் பாவிக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

இக் கலந்துரையாடலில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளர்,சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர் , பிரதேச செயலக பிரதிநிதி, பொதுச் சுகாதார பரிசோதரகர்கள், போலீசார், சமூக நிறுவனத் தலைவர்கள், மீனவ சங்கங்கள், கருவாடு பதனிடுவோர் சங்கம் என பல தரப்பினரும் பங்கேற்றனர்.

மக்களுக்கு சுகாதாரமான மீன்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக பொதுச் சுகாதார மருத்துவ பணிமனை, போலீசார், நகர சபை இணைந்து தொடரான பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப் பட்டு அதை நடைமுறைப்படுத்துவதென எடுக்கபட்ட தீர்மானத்திற்கு அனைத்து தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.