-யாழ் நிருபர்-
மகாகவி பாரதியாரின் 104வது ஆண்டு நினைவு தினம் இன்றையதினம் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில் இடம்பெற்றது.
இதன்போது பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
11 டிசம்பர் 1882ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மாளுக்கும் மகனாக பிறந்த பாரதியார் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதியாக பணிபுரிந்துள்ளார்.
அவர் தினமும் உணவளிக்கும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்ட பிறகு உடல் நலம் குன்றிய நிலையில் சில மாதங்களுக்குப் பிறகு 1921 செப்டம்பர் 11 அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.
அவரின் படைப்புகள் இன்றுவரை பேசப்படும் ஒன்றாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



