போலி கால்நடை வைத்தியர்கள் தொடர்பான எச்சரிக்கை
கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் அரச கால்நடை வைத்தியர் எனும் பெயரில் போலியான நபர்கள் கால்நடைகளுக்கும் வீட்டுப்பிராணிகளுக்கும் சட்டவிரோதமாக சிகிச்சைகளை மேற்கொண்டு பெருமளவு நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக , முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் அ.சிவபாலசுந்தர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவர்களால் மேற்கொள்ளப்படும் தவறான சிகிச்சைகளால் பெறுமதி மிக்க கால்நடைகளும்; பெருமளவில் இறந்துள்ளதாக அந்த மாவட்டங்களின் பண்ணையாளர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சிற்கும், கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்கள மாவட்ட அலுவலகங்களுக்கும் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் போலிக் கால்நடை வைத்தியர்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருப்பதுடன், குறித்த போலி நபர்களால் ஏமாற்றப்பட்டு ஏற்கனவே தமது கால்நடைகளையும் நிதியையும் இழந்தவர்களும் தற்போது அவ்வாறனவர்களது தகவல்களை அறிந்தவர்களும் அவர்கள் தொடர்பான விபரங்களை உடனடியாக செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சு, இல: 655, நாவலர் வீதி, என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.