
போலி இத்தாலிய வதிவிட விசா அட்டைகளுடன் இருவர் கைது
டுபாய் செல்ல முற்பட்ட இரண்டு பேரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை துபாய் நோக்கிச் செல்ல முற்பட்ட குறித்த நபர்கள் இருவரையும் சோதனையிட்டபோது, அவர்களிடம் போலி இத்தாலிய வதிவிட விசா அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
நேற்று மாலை துபாய்க்கு செல்லவிருந்த இரண்டு ஆண்களை புறப்பாடு முனையத்தில் நிறுத்தியிருந்த குடிவரவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி மேலதிக விசாரணைகளுக்காக எல்லைக் கண்காணிப்புப் பிரிவில் ஒப்படைத்தனர்.
பயணிகளிடம் உண்மையான இலங்கைக் கடவுச்சீட்டுகள் இருந்த போதிலும், சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அந்த நபர்களை சோதனையிட்டபோது, அவர்களது பயணப் பொதிகளில் இரண்டு போலி இத்தாலிய வதிவிட அட்டைகளுடன் போலியான இரண்டு இலங்கை கடவுச்சீட்டுகள் இருப்பதைக் கண்டனர்.
சந்தேகநபர்கள் நேற்று பயணிப்பதற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வெளியே இனந்தெரியாத ஒருவரிடமிருந்து போலியான பயண ஆவணங்களை பெற்றுள்ளதாக குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
43 மற்றும் 23 வயதுடைய சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தங்களின் முறையான பயண ஆவணங்களில் துபாய் செல்ல முயன்றார்களா என்றும், பின்னர் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல விரும்பினார்களா என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இருவரும் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள கிளையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

